அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்னையில் இருந்து 5 சிறப்பு விமானங்கள் - 787 பேருடன் புறப்பட்டு சென்றன
அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் பூடான் நாடுகளுக்கு சென்னையில் இருந்து 787 பேருடன் 5 சிறப்பு விமானங்கள் புறப்பட்டு சென்றன.;
ஆலந்தூர்,
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஏராளமான பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னையில் உள்ள அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் தூதரகம் மூலம் இவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாட்டு பயணிகளை 3 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்ல மத்திய அரசும் அனுமதி அளித்தது.
அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு மும்பை மற்றும் டெல்லி வழியாக 2 விமானங்கள் புறப்பட்டு சென்றது. இந்த 2 விமானத்தில் 250 பயணிகள் சென்றனர். மும்பை மற்றும் டெல்லி சென்று அங்குள்ள அமெரிக்கர்களையும் சேர்த்து அழைத்து செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற ஒரு சிறப்பு விமானத்தில் 248 பயணிகள் சென்றனர்.
ஜப்பான் மற்றும் பூடான் நாட்டில் இருந்து பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்கு வரவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்தநிலையில் சென்னையில் உள்ள ஜப்பான் மற்றும் பூடான் தூதரகம் மூலம் சுற்றுலா வந்த பயணிகளை திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஜப்பான் மற்றும் பூடான் நாட்டு பயணிகளை 2 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஜப்பானுக்கு 209 பயணிகள் சென்றனர்.
அதேபோல் பூடானுக்கு சென்ற விமானத்தில் 80 பயணிகள் சென்றனர். வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு எந்தவித தடையுமின்றி விரைவாக சோதனைகள் முடிக்கப்பட்டதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்திரி தெரிவித்தார்.