பணகுடியில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வீடு வீடாக சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கினார்

பணகுடியில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது வீடு வீடாக சென்று நேரில் வழங்கினார்.

Update: 2020-04-10 22:15 GMT
பணகுடி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் பணகுடி, பழவூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூர் மற்றும் கிராமங்களை சேர்ந்த ஏழை மக்கள் உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, தன்னார்வலர்கள் மூலம் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி ஏழை குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கினார்.

மேலும் பணகுடி சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்து, 10 ஆயிரம் முக கவசங்கள், 2 ஆயிரம் கையுறைகளை தன்னார்வலர்களிடம் வழங்கினார். 144 தடை உத்தரவுக்கு பிறகு பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூர் பகுதிகளில் சாலையோரம் உணவின்றி தவித்த 100 பேருக்கு தினமும் மதிய உணவு கிடைக்க ஏற்பாடு செய்தார்.

சிறுவர்- சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க கொரோனா ஒழிப்பு பற்றிய போட்டிகளை வாட்ஸ்அப் மூலம் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு வீடு வீடாக சென்று பரிசு பொருட்களை வழங்கவும், பணகுடி பஸ்நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது செய்து வரும் சேவைகளுக்கு தன்னார்வலர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நடமாடும் ஏ.டி.எம். வசதி

பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது முயற்சியின் பேரில் பணகுடி சுற்று வட்டார பகுதிகளில் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க வசதியாக நடமாடும் ஏ.டி.எம் எந்திரம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சிவகாமிபுரம், தளவாய்புரம், ரோஸ்மியாபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், கடம்பன்குளம், பாம்பன்குளம் கிராமங்களுக்கு நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் வாகனம் சென்றது. இதில் ஏராளமானோர் பணத்தை எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்