தென்காசி மாவட்டத்தில் கொரோனா வார்டாக மாறும் பள்ளிக்கூடம்-கல்லூரிகள்

தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் கொரோனா வார்டாக மாறுகின்றன.

Update: 2020-04-10 22:30 GMT
தென்காசி, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தாலும் நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அதிகமான நோய் தொற்று உள்ளவர்கள் வரும்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற வேண்டி உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாத பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளின் கட்டிடங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் 18 பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகள் குழுக்களை நியமித்து மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தென்காசி தாலுகாவில் செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, யூ.எஸ்.பி. கல்வி குழும நிறுவனங்கள், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜே.பி. பொறியியல் கல்லூரி, சிவகிரி தாலுகாவில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி, வியாசா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 50 படுக்கைகள் என மொத்தம் 18 பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தாளாளர், முதல்வர் ஆகியோரை அணுகி நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கூடிய அறைகளை தயார் செய்யும் பொருட்டு புல தணிக்கை செய்து மேற்கண்ட பகுதிகளை உள்ளாட்சி துறையினருடன் சேர்ந்து கிருமி நாசினி தெளித்து தயார் செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த இடங்களில் தளங்கள், கட்டிட பகுதிகள் வாரியாக உள்ள விடுதி மற்றும் வகுப்பறைகள் தண்ணீர், கழிப்பறை வசதி இருப்பதை உறுதிசெய்து விரிவான அறிக்கை அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்