ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் செயல்படவில்லை: நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு இல்லாமல் செல்லும் தண்ணீர் - விவசாயிகள் மகிழ்ச்சி
ஊரடங்கு உத்தரவால் சாய தொழிற்சாலைகள் செயல்படாததால் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவால் தண்ணீர் மட்டுமின்றி ஒரத்துப்பாளையம் அணையும் மாசுபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் மறு உத்தரவு வரும் வரை ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் திருப்பூர் சாயக்கழிவுகள் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் கலந்து வந்ததால் ஆற்றங்கரையோர விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர். குறிப்பாக மழைக்காலங்களில் திருட்டுத்தனமாக சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக திருப்பூர் பகுதியில் எந்த ஒரு சாய தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.
இதற்கிடையே கோவை, திருப்பூர் மட்டுமின்றி ஒரத்துப்பாளையம் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளதால் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்காமல் தண்ணீர் சென்றது. இதுகுறித்து நொய்யல் ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நொய்யல் ஆற்றில் மழை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து விடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பூர் பகுதியில் முழுமையாக சாய தொழிற்சாலைகள் இயங்காததால் தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்கவில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.