சிவகங்கையில் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.;

Update: 2020-04-10 21:30 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, கல்லல், காளையார்கோவில், சிவகங்கை, திருப்புவனம் ஆகிய பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டு மழை முடிந்தவுடன் மீண்டும் வழங்கப்பட்டது.

சிவகங்கையில் லேசான மழையும், திருப்பத்தூரில் சுமார் 1½ மணி நேரமும், தேவகோட்டை மற்றும் காளையார்கோவில் பகுதியில் ½ மணி நேரமும், சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் ஒரு மணி நேரமும் மழை பெய்தது. திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு அரை மணி நேரமும், நேற்று அதிகாலை அரை மணி நேரமும் மழை பெய்தது. மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று பகலில் குளுமையாக காணப்பட்டது. இதேபோல் இரவும் குளுமையான நிலை இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

காரைக்குடி-87, சிங்கம்புணரி-59, திருப்பத்தூர்-50, திருப்புவனம்-30.2, தேவகோட்டை-18.4, காளையார்கோவில்-10.2, சிவகங்கை-4. இதில் அதிகபட்சமாக காரைக்குடி பகுதியில் 87 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக சிவகங்கையில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்