தூத்துக்குடியில் பரபரப்பு: கொரோனாவுக்கு மூதாட்டி பலி - மேலும் 2 பேருக்கு நோய் தொற்று உறுதி
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு முடக்கப்பட்டு சுகாதார பணிகள் நடந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருந்தனர். இதில் 17 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 5 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் போல்டன்புரத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
போல்டன்புரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி யானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவே முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியரின் மாமியார் ஆவார். தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியருக்கும், அவருடைய கணவருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பெண் பலியான சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.