ஊரடங்கு காரணமாக முடங்கி போன வாழை விவசாயிகள் - பெருத்த நஷ்டம் என கண்ணீர்

ஊரடங்கு காரணமாக முடங்கி போன வாழை விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளதாக கண்ணீர் சிந்துகின்றனர்.

Update: 2020-04-09 22:15 GMT
வேலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் விவசாயிகளும் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு உணவகங்கள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாழை இலை அதிகம் தேவைப்பட்டதால் வாழை விவசாயிகள் வாழை இலை மூலம் லாபம் பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளதால் பெரிய, சிறிய அளவிலான அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இயங்கும் சில உணவகங்களிலும் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக வாழை இலை பயன்பாடு குறைந்துள்ளதால் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட கீழ்அரசம்பட்டு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து வாழை விவசாயிகள் வேதனையுடன் கண்ணீர் மல்க கூறியதாவது:-

வாழை விவசாயத்தை பொறுத்தவரை வாழை தாரால் வருவாய் வரும். இதுவும் சில சமயங்களில் விலை வீழ்ச்சி மற்றும் காற்றினால் வாழை சாய்ந்தால் வருவாய் முழுவதையும் நாங்கள் இழந்து விடுவோம். பெருத்த நஷ்டத்தையே சந்திக்க நேரிடும். ஆனால் வாழை இலை மூலம் 6 மாதத்திற்கு எங்களுக்கு தொடர்ந்து சிறிது, சிறிதாக வருவாய் வரும். அதைதான் முக்கிய வருவாயாக வைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்ததை அடுத்து எங்களுக்கு வாழை இலை மூலம் போதிய வருவாய் கிடைத்து வந்தது.

ஒரு விவசாயி வாரத்திற்கு ஒரு சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாழை இலையை வேலூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வார். அதனால் ஒரு இலைக்கு ஒரு ரூபாய் என மாதம் சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை எங்களுக்கு வருவாய் வரும். இதை வைத்து தான் குடும்பத்தை நடத்தி, கடனை செலுத்தி வந்தோம். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

மேலும் எந்த விசேஷ நிகழ்ச்சிகளும் நடைபெறுவது இல்லை. இதனால் முற்றிலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலைகள் மரத்தில் 3 நாள் மட்டுமே சேதமடையாமல் இருக்கும். அதன் பின்னர் இலைகள் கிழிந்து விடும். இதனால் சேதமடைந்து காய்ந்த ஆயிரக்கணக்கான இலைகளை எரித்து வருகிறோம். மேலும் இந்த நஷ்டத்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. குடும்பம் நடத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு எங்களை போன்ற சிறு, குறு விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். 1 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளோம். மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளான நாங்கள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்