மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு - தாராவியில் தமிழ்பெண் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,364 ஆகஉயர்ந்தது. தாராவியில் தமிழ்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
மும்பை,
நாட்டில் கொரோனா பாதித்த மாநிலங்களில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 229 பேர் கொடிய கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சராசரியாக 100 என இருந்த நிலையில், நேற்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 200-ஐ கடந்தது, மராட்டிய மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்தது. இதில் மும்பையில் சுமார் 800 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மும்பையில் தீவிரமாக கொரோனா பரவி வருவதால், இங்கு 381 பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் மும்பை தாராவியிலும் நேற்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. இங்கு ஏற்கனவே துணிக்கடைக்காரர் ஒருவர் பலியானார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவர் பலியானது தெரியவந்தது.
இந்தநிலையில் தாராவி கல்யாணவாடியை சேர்ந்த 70 வயது தமிழ் மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக பரேலில் உள்ள கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாராவியில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவியில் கொரோனா வேகம் எடுத்து பரவி வருவது குடிசைப்பகுதி மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.