கொரோனா பரவலை தடுக்க மும்பையில் 381 பகுதிகள் ‘சீல்’ வைப்பு
கொரோனா பரவலை தடுக்க மும்பையில் 381 பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று வரை 1300-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைநகர் மும்பையில் மட்டும் 775 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்ஒரு பகுதியாக கொரோனாவால் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படும் இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக (கன்டெய்ன்மென்ட் சோன்) அறிவிக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்படும் பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். அங்கு வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாது. வீடுகளில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யும்.
நேற்று வரை மும்பையில் 381 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்பு கட்டிடங்கள், குடிசைப்பகுதிகள், கட்டிடங்கள் தவிர தனியார் ஆஸ்பத்திரிகளும் இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் அடங்கும். ‘ஜி’ வடக்கு, ‘கே’-மேற்கு ஆகிய வார்டு பகுதிகளில் அதிகளவில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.
தாராவியிலும் கல்யாணவாடி, பாலிகாநகர் உள்ளிட்ட கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர தாராவியில் உள்ள பொது கழிவறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதேபோல டாக்டர் மற்றும் குழுவினருடன் தாராவியில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.