பூட்டி இருந்த பேன்சி கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

மதுரையில் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

Update: 2020-04-09 22:30 GMT
மதுரை, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கைக்கெடிகாரம், சுவர் கெடிகாரம், கவரிங் நகைகள், வீட்டு அலங்கார பொருட்கள் என பேன்சி பொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் கடைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் அடுத்தடுத்து நெருக்கடியாக அமைந்து இருக்கும். இதில் மேலகோபுர தெரு பகுதியில் 2 மாடிகளை கொண்ட பேன்சி கடையில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது.

உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

மேலும் நெருக்கடியான கடைகள் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தாலும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கடையின் 2 மாடிகளில் இருந்த விலை உயர்ந்த கெடிகாரங்கள் மற்றும் பேன்சி பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதனால் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

ஊரடங்கு நேரத்தில் பூட்டிய கடையில் எவ்வாறு தீப்பிடித்தது என தெரியவில்லை. மின் கசிவு காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் மதுரை திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்