புளியங்குடி- வடகரை பகுதியில் தோட்டங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் - தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின
புளியங்குடி, வடகரை பகுதியில் தோட்டங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ஏராளமான தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின.
அச்சன்புதூர்,
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருணாசல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் முத்துப்பாண்டி (வயது 54), முருகராஜ் (43). இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி பீட் பகுதியில் உள்ளது. அவர்கள் தங்களது தோட்டத்தில் வாழை, எலுமிச்சை பயிரிட்டு உள்ளனர். தென்னை, பலா, மா மரங்களும் உள்ளன. யானைகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்கும் வகையில், இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை தோட்டத்தில் பட்டாசு வெடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் வீடு திரும்பிய நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் 5 யானைகள் குட்டியுடன் விளைநிலங்களில் புகுந்தது. அங்கிருந்த வாழை, தென்னை, எலுமிச்சை பயிர்களை சேதப்படுத்தியது. பின்னர் யானை கூட்டங்கள் அங்கிருந்து அதிகாலையில் வெளியேறி சென்றன.
இந்நிலையில் நேற்று காலை சகோதரர்கள் இருவரும் தோட்டத்திற்கு சென்றபோது யானை கூட்டங்கள் அட்டகாசம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் குலை தள்ளிய நிலையில் இருந்த 70-க்கும் மேற்பட்ட வாழைகள், தென்னை குருத்துகள் மற்றும் தண்ணீர் பைப்லைன் குழாய்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளன.
தகவல் அறிந்து புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் வனசரகர் அசோக்குமார் மற்றும் வனக்காவலர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
வடகரை
இதேபோல் கடையநல்லூர் அருகே வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருகே மேட்டுக்கால், வைரவன் காடு பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் மா, வாழை, தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் ரெசவு முகமது மற்றும் சவுகத் அலி ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து அங்கு அவர்கள் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தது. மேலும் மாமரங்களையும் சேதப்படுத்தியது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மரங்களில் காய்த்து தொங்கும் மாங்காய், தேங்காய் போன்றவைகளை பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், யானைகளின் அட்டகாசம் விவசாயிகளை மேலும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே வனத்துறையினர் உடனடியாக இரவு நேரத்தில் வெடி வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.