மதுரை-நாகர்கோவில் இடையே தினமும் இயக்கப்படும் பார்சல் சிறப்பு ரெயில்களில் அனுப்ப வேண்டிய பொருட்கள் என்னென்ன?

மதுரை-நாகர்கோவில் இடையே தினமும் இயக்கப்படும் பார்சல் சிறப்பு ரெயில்களில் அனுப்ப வேண்டிய பொருட்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-09 21:30 GMT
மதுரை, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால், பால், மளிகை பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்னக ரெயில்வே சார்பில் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த வாரம் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன. அதேபோல, நேற்று சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் சிறப்பு பார்சல் ரெயில் இயக்கப்பட்டது. இதில் சென்னையில் இருந்து 133 பண்டல்கள், விழுப்புரத்தில் இருந்து 34 பண்டல்கள் சானிடைசர்கள், முக கவசம், கையுறை மற்றும் ஊசி, மருந்துகள் மதுரை வந்தன. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு உணவுப்பொருட்கள் பார்சல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ரெயில்கள் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறும் வரை தினசரி இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டு மதுரைக்கு மதியம் 1.40 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு ஒரு சிறப்பு பார்சல் ரெயில் புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. இரவு 10 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த ரெயில்களில் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்கலாம். பொருட்களை அனுப்ப விரும்புபவர்கள் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்