கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையில், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கோவில்பட்டி நகரசபையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 440 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் அவர், திருநங்கைகள் 82 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதேபோன்று கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய நகர பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். கடம்பூரில் வேளாண்மை துறை சார்பில், ஒரு விவசாயிக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்கப்பட்டது. கடம்பூர் நகர பஞ்சாயத்துக்கு கிருமிநாசினி தெளிக்கும் கருவி வழங்கப்பட்டது. கயத்தாறில் 2 நடமாடும் காய்கறி வண்டிகள் தொடங்கி வைக்கப் பட்டன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில், முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சங்க தலைவர் அய்யலுசாமி, செயலாளர் கேசவன், பொருளாளர் ராஜய்யா, ஆலோசகர் ராஜாமணி ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினர்.
இதேபோன்று கோவில்பட்டி ஜோதிலிங்கம் பட்டு மகால் அதிபர் செந்தில்குமார் ரூ.50 ஆயிரத்தையும், ஸ்ரீகரா வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஷியாமளா செந்தில்குமார் ரூ.50 ஆயிரத்தையும், கமலா மருத்துவமனை சார்பில் டாக்டர் கமலா மாரியம்மாள், டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் ரூ.50 ஆயிரத்தையும், கடம்பூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா ரூ.50 ஆயிரத்தையும், கோவில்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் ரூ.35 ஆயிரத்தையும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினர்.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, யூனியன் துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ்,
நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் மாடசாமி என்ற மாதவன் (கடம்பூர்), ஜோதிபாசு (கயத்தாறு), முருகன் (கழுகுமலை), கடம்பூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, அ.தி.மு.க. நகர செயலாளர்கள் வாசமுத்து, கப்பல் ராமசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், முன்னாள் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகேசன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில்...
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மொத்தம் 118 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, முக கவசம், கைகழுவும் திரவம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் அவர், உடன்குடி, கானம் நகர பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் கோபால், அரசு வக்கீல் ரவிச்சந்திரன், தொழில் அதிபர் வடமலை பாண்டியன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், முருங்கை மகாராஜா, நகர செயலாளர் மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோட்டை மணிகண்டன், பூந்தோட்டம் மனோகரன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கோபால் மற்றும் பலர் உடன் இருந்தனர்.