ஊரடங்கால் அறுவடை செய்ய முடியவில்லை: மரத்திலேயே வெடித்து அழுகும் பலாப்பழங்கள் - பண்ருட்டி விவசாயிகள் வேதனை

பண்ருட்டி பகுதியில் ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய முடியாததால் மரத்திலேயே பலாப்பழங்கள் வெடித்து அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2020-04-09 12:15 GMT
நெல்லிக்குப்பம்,

பண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப் பழம். பண்ருட்டி பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டி பலாவிற்கு என்று மார்க்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்கு காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்குக் காரணம்.

மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். முக்கனியில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழம். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும். மேல்தோல் கரடு முரடாக காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களை காட்டிலும் இதற்கு மவுசு அதிகம். ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு பெயர் பெற்றது பண்ருட்டிதான். செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, நரியங்குப்பம், பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, வாண்டராசன்குப்பம், குமளங்குளம், விலங்கல்பட்டு, மூலக்குப்பம், பெத்தாங்குப்பம், நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும், பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பலாப் பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் பரவலை தடுக்க கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் பலாப் பழம் அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி உள்ளன.

ஏற்கனவே அறுவடை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக வாகனங்களில் ஏற்றப்பட்ட பலாப் பழங்கள் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பழங்களும் அழுகி வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து பலாப்பழ விவசாயி கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப் பழங்களை அறுவடை செய்தோம். அந்த பழங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். இருப்பினும் லட்சக்கணக்கான பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பலாப்பழங்களை அறுவடை செய்யவும், இங்கிருந்து தடையின்றி வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் பலாப்பழங்களை ஏற்றிச்செல்லவும், பலாப்பழங்களை பதப்படுத்தி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்