பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனாவா? ஒரேநாளில் 24 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி - குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 24 பேர் ஒரே நாளில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா இருக்குமோ? என்று குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2020-04-09 11:28 GMT
நாகர்கோவில்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கோர தாண்டவமாடி வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்த 4 பேர் மற்றும் அவர்களில் ஒருவரான நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் மூலமாக 88 வயது பாட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சென்னை விமான நிலைய ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அந்த வகையில் குமரியில் மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா தொற்றுள்ளவர்கள் உள்ள வீடுகளைச் சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதாவது, இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, வெளியில் இருந்து யாரும் இந்த பகுதிக்குள் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் தினமும் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடக்கிறது. அதே சமயத்தில் அங்குள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்பது பற்றிய சோதனையும் நடந்து வருகிறது.

இது தவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் உள்பட 165 பேரும், அவர்களுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய வீடுகளிலும் சிவப்பு நிற குறியீட்டுடன் கூடிய பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

முதல் கட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்திருந்தாலும் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் 165 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து, அதில் தொற்று இருப்பவர்களை தனிமைப்படுத்தி மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களை தவிர மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனையை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நெருக்கமாக பழகியவர்கள் என மொத்தம் 24 பேர் ஆம்புலன்சுகள் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தொற்றுநோய் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

இவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்து நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் கொரோனா தொற்றுள்ளவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என 24 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்