சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீசாருடன், தனியார் காவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2020-04-09 10:44 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி பஸ் நிலையத்தில் தனியார் செக்யூரிட்டி (காவலாளி) ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருபவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்திற்கு புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மாறன், ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதுச்சேரி பகுதிகளில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். புதுவை அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிவாரணம் பெறுவதற்கு பொதுமக்கள் வங்கிகளில் திரண்டு வருகிறார்கள். எனவே வங்கிகளில் பணியாற்றி வரும் காவலர்களிடம் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இதேபோல் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிற்க சொல்ல வேண்டும்.

50 வயதுக்கு மேல் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே 50 வயதுக்கு மேல் உள்ள காவலாளிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம். அதேபோல் சர்க்கரை நோய், இதய நோய் பிரச்சினை உள்ளவர்களையும் பணியில் அமர்த்த வேண்டாம். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதுவையில் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, பருப்பு வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீசாருடன், காவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜீத் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்