தர்பூசணி ஏற்றிச்சென்ற மினிலாரி கவிழ்ந்தது - சிதறிக்கிடந்த பழங்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்
விக்கிரவாண்டியில் தர்பூசணி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் சிதறிக்கிடந்த பழங்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
விக்கிரவாண்டி,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு மினிலாரி, புதுச்சேரி மாநிலம் நயினார்பாளையத்திற்கு புறப்பட்டது. மினி லாரியை நயினார்பாளையத்தை சேர்ந்த டிரைவர் காசிவேலு (வயது 48) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இந்த மினி லாரி நேற்று மதியம் 2 மணியளவில் விக்கிரவாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் அருகே சென்றபோது மினி லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நிலைதடுமாறி நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மினி லாரியில் இருந்த தர்பூசணி பழங்கள், சாலையில் விழுந்து சிதறி சேதமடைந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக வந்த வாகனங்களை அங்குள்ள சர்வீஸ் சாலையில் திருப்பி விட்டனர்.
பின்னர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையத்தில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த மினி லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கிடையே சாலையில் சிதறிக்கிடந்த தர்பூசணி பழங்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் அள்ளிச்சென்றனர்.