கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு: சைதாப்பேட்டை பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரம்
வேலூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சைதாப்பேட்டை பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி தென்பட்டவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி.யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இது தவிர வேலூர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளான சின்னஅல்லாபுரம், கருகம்புத்தூர், கஸ்பா, ஆர்.என்.பாளையம் போன்ற பகுதிகளில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கொரோனாவால் நேற்று முன்தினம் திடீரென இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறந்த நபர் சைதாப்பேட்டை பகுதியில் பஜ்ஜி, போண்டா போட்டு விற்பனை செய்யும் சிறிய கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு வடமாநிலத்தவர்கள் பலர் வந்து உணவு பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். எனவே அவர் வசித்த பகுதி முழுவதும் தற்போது வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தொகை குறித்த தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.
இறந்த நபர் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சில தனியார் மருத்துவமனைகளுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அவர் சி.எம்.சி.யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு முன்பு உறவினர்கள் அவரை சந்தித்துள்ளனர். எனவே அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்படுகிறது.
இறந்த நபர் சிகிச்சை பெற்று வந்த சி.எம்.சி. மருத்துவமனை வளாகம் உள்பட பல்வேறு இடங்களிலும், அவர் வசித்த பகுதி முழுவதும் நவீன கிருமி நாசினி தெளிப்பு எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சைதாப்பேட்டை பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூய்மை காவலர்கள் கொண்ட 30 குழுக்கள் மூலமும் ஆற்காடு சாலை, வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு என பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.