வேலைக்கு ஆட்கள் வராததால் குடும்பத்தினர், உறவினர்களை கொண்டு நெல் அறுவடையில் ஈடுபடும் விவசாயிகள்

வேலைக்கு ஆட்கள் வராததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை கொண்டு நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-04-08 22:15 GMT
செந்துறை,

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வாழ்வியல் நடைமுறைகளையும், பலரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்தந்த பகுதிகளில் போலீசார் உள்ளிட்டோர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகளில் இருந்து, உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய பணிகளுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை சிறு மற்றும் குறு விவசாயிகள் 90 நாட்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. வழக்கமாக வெளியூர்களில் இருந்து கதிர் அறுவடை எந்திரம் வைத்துள்ளவர்களை அழைத்து வந்து, எந்திரம் மூலம் அறுவடை நடைபெறும். சில பகுதிகளில் தொழிலாளர்கள் மூலமும் கதிர் அறுக்கப்படும். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளியூர்களில் இருந்து கதிர் அறுவடை எந்திரங்களை வரவழைக்க முடியவில்லை. மேலும் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்களும் கதிர் அறுக்கும் வேலைக்கு வரவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் வேளாண் எந்திரங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளபோதும், போதுமான கதிர் அறுவடை எந்திரங்கள் இல்லை.

இதனால் அறுவடை பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற கலக்கத்தில் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மூலம் கதிர் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கதிர் அடிக்கும் எந்திரத்தை, உழவன் செயலி மூலம் பதிவு செய்து வரவழைத்து, அதில் நெற்கதிர்களையிட்டு, நெல்மணிகளை தனியாக பிரித்து களத்தில் கொட்டி வைக்கின்றனர்.

இதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் பெரிய ஏரியை ஒட்டி 400 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை கொண்டே கதிர் அறுவடையில் ஈடுபட்டனர். பின்னர் கதிர் அடிக்கும் எந்திரம் மூலம் நெல்மணிகள் பிரிக்கப்பட்டது. நெல்மணிகளை மூட்டைகளாக கட்டி, அவற்றை மாட்டு வண்டியில் கொண்டு சென்றனர். வைக்கோல் கட்டுகள் வயலில் கிடந்தன.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு நெல் அறுவடை எந்திரம் மூலம் சிலர் வயலில் அறுவடை செய்ததை காண முடிந்தது. மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை பணிக்காக 25-க்கும் மேற்பட்ட கதிர் அடிக்கும் எந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் இலவசமாக எந்திரம் கிடைத்துள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். மேலும் அறுவடைக்கான செலவினம் குறைந்து லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் எக்டேரில் நெல் அறுவடை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்