விபத்தில் காதலி சாவு: துக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை

விபத்தில் காதலி இறந்ததால் துக்கத்தில் இருந்த என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-04-08 21:30 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம் புகளூர் பசுபதிநகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர், என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றினார். இந்த நிலையில், இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற போது விபத்தில் இறந்தார். காதலி இறந்த நாளில் இருந்தே கார்த்திக் மிகுந்த மன வேதனையிலும், துக்கத்திலும் இருந்தார். இந்த நிலையில் கார்த்திக்கின் தாய்-தந்தை கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். புகளூர் பசுபதிநகரில் அவரது தாயும், அய்யம்பாளையத்தில் தந்தையும் வசித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவது பற்றி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மாதம் 23-ந்தேதி கார்த்திக் சென்னையிலிருந்து புறப்பட்டு தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் கடந்த மாதம் 28-ந்தேதி அய்யம் பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கார்த்திக் சென்றார். அங்கு கார்த்திக், எலி பேஸ்டை (விஷம்) தின்று அவரது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக குடும்பத்தினர் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த 4-ந்தேதி மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்