வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணியாவிட்டால் கைது - மும்பை மாநகராட்சி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மும்பையில் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் கைது நடவடிக்கை பாயும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2020-04-08 23:21 GMT
மும்பை, 

நாட்டிலேயே மராட்டியம் தான் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொடும் நோயால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த மாநில தலைநகர் மும்பை கொரோனா வைரஸ் நோயால் ஆட்டம் கண்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மும்பையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் கொரோனாவுக்கு நேற்று 5 பேர் பலியானார்கள். இதன் மூலம் மும்பையில் பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பையில் கொரோனா தொடர்ந்து வேகம் எடுத்தும் வரும் நிலையில், அந்த வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மும்பையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி வீட்டில் இருந்து மார்க்கெட், ஆஸ்பத்திரி என அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.

வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்று கடந்த 4-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில், மீறினால் கைது நடவடிக்கை பாயும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்