வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வீடுகளுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் - சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

சென்னையில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால், வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.

Update: 2020-04-08 22:45 GMT
சென்னை, 

சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக் கும் மையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக கோடை காலங்களில் ஏரிகள் வறண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது கடந்த கால வரலாறாக இருந்தது. ஆனால் நடப்பாண்டு கோடை தொடங்கிய நிலையில், குடிநீரின் தேவை அதிகரித்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மாறாக, வீடுகளுக்கு கூடுதலாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டியில் 1,283 மில்லியன் கன அடி, சோழவரம் 72, புழல் 2 ஆயிரத்து 851, செம்பரம்பாக்கம் 2 ஆயிரத்து 72 உள்பட 6 ஆயிரத்து 278 மில்லியன் கன அடி (6.278 டி.எம்.சி.) தண்ணீர் சேமிப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் சேர்த்து 605 மில்லியன் கன அடி மட்டுமே இருந்தது.

தற்போது ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் வீடுகளுக்கு 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது தவிர 3 ஆயிரத்து 600 லாரி நடைகள் மூலம் இலவச தண்ணீரும், 1,400 லாரி நடைகள் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இது தவிர வீராணம் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால், அங்கிருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக் கப்பட்ட நிலையில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது வீடுகளுக்கு கூடுதலாக வழங் கப்படுகிறது.

இதுதவிர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றம் அகிய பணிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் குடிநீருக்காக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மாறாக புதிய பணிகள் மற்றும் புதிய இணைப்பு வழங்கும் பணிகளை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளோம். கொரோனா பிரச்சினை முடிந்த உடன் மீண்டும் இந்த பணிகள் வழக்கம் போல் தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்