வெளியாட்கள் ஊருக்குள் வராதபடி ஆத்துப்பாளையம் எல்லையை மூடிய பொதுமக்கள்
திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊர் பொதுமக்கள் தங்களது ஊர் எல்லையை மூடினர்.
அனுப்பர்பாளையம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் சாலைகளில் வாகனங்களில் சுற்றி திரிவது அரசின் உத்தரவை மீறுவது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் மேலும் பரவ வழிவகுப்பதாக அமைகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை முதல் அந்த பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாத வகையிலும், வெளிநபர்கள் யாரும் அங்கு நுழையாதபடிக்கும் ஆத்துப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து எல்லைகள் அனைத்தும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் கயிறுகளை கட்டி எல்லையை மூடினர்.
அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், பால், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அரசு உத்தரவின்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்த பகுதியிலேயே கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த பகுதியை மாநகராட்சி, சுகாதாரத்துறை, போலீசார் இணைந்து சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சூழலில், ஆத்துப்பாளையத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ள சம்பவம் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.