நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா - ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

Update: 2020-04-08 23:00 GMT
நெல்லை, 

கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கொரோனா வார்டில் வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். ஆனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் கொரோனா அறிகுறியுடன் தனிமை வார்டில் சிகிச்சை பெற்ற வந்த 5 வயது சிறுவன் உள்பட 4 பேர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. ரத்த மாதிரி பரிசோதனையில் அவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் தனிமை வார்டில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பு கவச உடை அணிந்த டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்