திண்டுக்கல்லில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை

திண்டுக்கல்லில் இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.

Update: 2020-04-08 08:50 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திண்டுக்கல்லில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து 4.45 மணி அளவில் பலத்த காற்று வீசியது.

அடுத்த சில நொடிகளில் இடி,மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் வரை பெய்தது. இதனால் திண்டுக்கல் நகரில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. கொரோனா வைரசுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிய மக்கள் மழையை கண்டு மகிழ்ந்தனர். அதேநேரம் பலத்த காற்று வீசியதால் உடனடியாக மின்சாரம் துண்டிக் கப்பட்டது. இதனால் சுமார் 1½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

திண்டுக்கல் அடுத்த சின்னபள்ளப்பட்டி இ.கே.நகரில் டெல்பின் மேரி என்பவருக்கு சொந்தமான பேப்பர் கப் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று மாலை பெய்த மழையின்போது வீசிய காற்றில் தொழிற்சாலையின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், மூலப்பொருட்கள் ஆகியவை மழையில் நனைந்து சேதமடைந்தது.

பெரும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள தாண்டிக் குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் பரவலாக மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதேபோல் குஜிலியம்பாறை பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, இரவு 7 மணி வரை நீடித்தது. வேடசந்தூர் பகுதியில் சுமார் 10 நிமிடம் சாரல் மழை பெய்தது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் திடீரென்று பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். 

மேலும் செய்திகள்