ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 1,500 பேர் கைது - 1,050 வாகனங்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 1,500 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர், 1,050 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்கள் வருகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நேற்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு சாலை, சென்னை மெயின்ரோடு, சேலம் மெயின்ரோடு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ரோந்து வந்தார். அப்போது சாலைகளில் தேவையில்லாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார். மீண்டும் இதுபோல் வந்தால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன ஓட்டிகளை எச்சரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் வராமல், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருமுறை கடைக்கு வந்தால், 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளையும், ஒருவாரத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து தினமும் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த 1,500 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளோம். 1,050 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதாக பொய் சொல்லிக்கொண்டு சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.