கும்மிடிப்பூண்டி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானங்கள் திருமண மண்டபத்துக்கு மாற்றம்

கும்மிடிப்பூண்டி பகுதி யில் பாதுகாப்பற்ற டாஸ் மாக் கடைகளில் இருந்த மதுபானங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

Update: 2020-04-06 22:30 GMT
கும்மிடிப்பூண்டி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளன. மதுபானங் கள் கிடைக்காத சூழலில் இது தொடர்பாக பல்வேறு அசாம்பாவித சம்பவங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 26-ந் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே முனுசாமி நகரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு போனது. அதேபோல கடந்த 4-ந் தேதி காயலார்மேடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரை கடப்பாரை கொண்டு துளையிட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு போனது.

திருமண மண்டபத்துக்கு மாற்றம்

இந்தநிலையில் இதுபோல் மதுபானங்கள் திருடு போக வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை குடோன்கள், தாலுகாவில் உள்ள பண்டக சாலைகள் அல் லது திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்து பாதுகாப்பாக வைக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு அதன் மேலாண்மை இயக்குனர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.

இதையடுத்து கும்மிடிப்பூண்டி பகுதியில் பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான பெட்டிகள் அனைத்தும் மினி டெம்போ மற்றும் மினி லாரிகளில் ஏற்றி கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடமாற்றம் செய்யப்பட்டது.

திருமண மண்டபத்தில் அடுக்கி வைக்கப்பட்ட அந்தந்த கடைகளின் மதுபான பெட்டிகளுக்கு நேராக கடை எண்களை எழுதி அதன் விற்பனையாளர்கள் பதிவு செய்தனர். மேலும் தற்போது அந்த திருமண மண்டபத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

வாணிப கிடங்கில்...

இதேபோல் திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதன் ஊழியர்களே மாற்று சாவி மூலம் கதவை திறந்து மதுபாட்டில்களை திருடி கூடுதல் விலைக்கு விற்றனர். இது தொடர்பாக பார் உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் என 3 பேர் கைதானார்கள்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி வந்து திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் பாதுகாப்பாக வைத்து சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்