கொரோனா தடுப்பு பணிக்காக அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இயங்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அனைத்து மருத்துவமனைகளும் வழக்கம் போல் இயங்க வேண்டும் என தென்காசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தினார்.
தென்காசி,
தனியார் மருத்துவமனைகள் முழு அளவில் செயல்படவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் வழக்கமாக செயல்படும் அளவுகளில் தற்போதும் செயல்பட்டு வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை தொடர்ந்து தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து தனிக்கவனத்துடன் அளிக்கப்பட வேண்டும்.
டாயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எவ்வித சுணக்கமும் இன்றி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தொற்றா நோய் சிகிச்சை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்ந்து தங்கு தடையின்றி அளிக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை உள்பட அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தென்காசி இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.