ஆதிதிருவரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-04-05 22:00 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலானது, திருச்சி ரங்கநாதர் கோவிலை விட மிகப்பழமையானதாகும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. நேற்றுமுன்தினம் மாலையில் வழக்கமான பூஜைகள் முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் 3 வாலிபர்கள் கோவில் சுற்றுசுவர் அருகில் உள்ள வேப்பமரம் வழியே ஏறி கயிறு கட்டி கோவிலுக்குள் இறங்கினார்கள். பின்னர் அவர்கள் கோவில் மேல் தளத்தின் கதவை உடைத்து கோவில் பிரகாரத்துக்குள் சென்று அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இவை அனைத்தும் கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று காலையில் வழக்கம்போல் கோவிலுக்கு சென்ற அர்ச்சகர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது பற்றி கோவில் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் ஆதி திருவரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அங்கு கொள்ளை போன பணம் எவ்வளவு? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் கொள்ளையிலும் 3 வாலிபர்களே ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இரு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு அமலில் இருக்கும் போது நடந்த இக்கொள்ளை சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்