கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1¼ லட்சம் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பயிற்சி - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 25 ஆயிரம் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆயுஷ் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய டாக்டர்களையும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க களமிறக்குவது என மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
ஆன்லைனில் பயிற்சி
கொரோனாவை எதிர்த்து போராட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் மற்றொரு முயற்சியாக 250 ஆயுஷ் மருத்துவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் ஆயுஷ் மருத்துவர்களுக்கு அடுத்த வாரம் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.