மண் பாண்டங்கள் தயாரிக்க மண் எடுக்க அரசு அனுமதி தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு

மண் பாண்டங்கள் தயாரிக்க மண் எடுக்க அரசு அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-04-05 21:10 GMT
புதுடெல்லி, 

மண் பாண்டங்களை தயாரிக்க நிலத்தில் இருந்து மண் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் இருந்தன. இதனால் மண் பாண்ட தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர்.

எனவே மண் பாண்டங்களை தயாரிக்க மண் எடுப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என அறிவிக்க வேண்டுமென மண் பாண்ட தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி மண் பாண்ட தொழிலாளர்கள் இனி மண் எடுப்பதற்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மண் பாண்டங்களை தயாரிக்க நிலத்தில் இருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற தேவையில்லை. மண் பாண்ட தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

விவசாய நிலங்களிலும் கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள குளங்கள், குட்டைகள் ஆகிய நீர்நிலைகளில் வெள்ளம் வடிந்த பிறகு குவியும் மண்ணை மகாத்மா காந்தி ஊரகப் பணி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்காக எடுக்கவும் அனுமதி தேவையில்லை.

நீர்ப்பாசனத்துக்கான கிணறுகள், குடிநீர் கிணறுகள் மற்றும் கட்டிடங்களுக்கான அஸ்திவாரம் ஆகியவற்றுக்கான தோண்டும் பணிகள் மற்றும் கால்வாய், ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள அடைப்புகளை நீக்கும் வகையில் தோண்டப்படும் மண் ஆகியவற்றுக்கு தற்போது இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்