தாராவியில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு - இதுவரை 6 பேரை வைரஸ் தாக்கியது
தாராவியில் 21 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.எனவே அங்குகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆகி உள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் ஆட்கொல்லி கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டா், பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆகியோரை கொரோனா தாக்கி உள்ளது. இவர்கள் தவிர தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரர் உயிரிழந்துவிட்டார்.
இதேபோல தாராவியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஒர்லியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவு பணியாளரையும் கொரோனாவிட்டு வைக்கவில்லை. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் கொரோனா பரவியதற்கு ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் தாராவி, மதினா நகரை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்துள்ளது. இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தாராவியில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் வீடுகளின் அருகில் வசிப்பவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறியுடன் யாரும் உள்ளார்களா என சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல தாராவியில் கொரோனா கிளினிக் ஒன்றையும் மாநகராட்சி தொடங்கி உள்ளது.