பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் நாராயணசாமி ஆய்வு - பொதுமக்களிடம் விசாரணை

புதுவை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது விலை நிலவரம் குறித்து பொதுமக்களிடம் விசாரித்தார்.

Update: 2020-04-05 05:24 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், பால் பூத்துகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் பெரிய மார்க்கெட்டில் மளிகை பொருட்களும், நேரு வீதியில் பழக்கடைகளும், புதிய பஸ் நிலையம், நவீன மீன் அங்காடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனித்தனியாக காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா? என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நாள்தோறும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று புதுவை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள கடைக்காரர்களிடம் காய்கறிகளின் விலையை ஒவ்வொன்றாக கேட்டிருந்தார். மேலும் கடைகளுக்கு வந்த பொதுமக்களிடம் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா? அதிக விலைக்கு விற்கப்படுகின்றனவா? என்பது குறித்து கருத்து கேட்டார். பொதுமக்கள் காய்கறி வாங்க வரும்போது கடைகளில் இடைவெளிவிட்டு வரிசையாக நின்று காய்கறி வாங்குமாறும் அறிவுறுத்தினார். காய்கறி வாங்க தனியாக வருமாறும் கூட்டு சேர்ந்து வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். புதிய பஸ் நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் பெரும்பாலும் வெயிலிலேயே செயல்பட்டு வந்தன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து காய்கறிகள் கடை முன்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

புதுவை பஸ் நிலையத்தில் இயங்கி வரும் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக நாள்தோறும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக புதுச்சேரி நகராட்சி சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைக்க முடிவு செய்தது.

அதன்படி கிருமிநாசினி சுரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த சுரங்கம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். அதன்பிறகு வெளியில் இருந்து மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் இந்த கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாகத்தான் உள்ளே வரவேண்டும்.

இதுபற்றி புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் கேட்டபோது, பஸ் நிலையத்திற்கு காய்கறி வாங்க அதிகளவில் மக்கள் வருகை தருகிறார்கள். எனவே கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதால் சுகாதாரத்துறை அனுமதி அவசியம். அதற்காக அனுமதி வந்தவுடன் கிருமி நாசினி சுரங்கம் செயல்பாட்டிற்கு வரும்’ என்றார்.

மேலும் செய்திகள்