அம்மாபேட்டை பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழைகள் விலை வீழ்ச்சி கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கும் அவலம்

அம்மாபேட்டை பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழைகள் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது.

Update: 2020-04-04 21:30 GMT
அம்மாபேட்டை, 

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி, கொமராயனூர், தேவலன்தண்டா, மசக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் கதலி, நேந்திரம், செவ்வாழை போன்ற வாழைகளை பயிரிட்டுள்ளனர். இதனை சரியான பருவத்தில் அறுவடை செய்து விற்பனை செய்தால் உரிய விலை கிடைக்கும்.

கடந்த 10 நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொமராயனூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்ற விவசாயி தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்திலும் தனது மகள் நிர்மலாதேவிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்திலும் நேந்திரம் ரக வாழைகள் பயிரிட்டிருந்தனர்.

இவை அனைத்தும் கடந்த 1 வாரத்திற்கு முன்பு அறுவடை பருவத்தில் இருந்தது. ஆனால் அப்போது ஊரடங்கு உத்தரவு தொடங்கியதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள் யாரும் விலை கேட்க வரவில்லை. இதன் காரணமாக வெயிலில் வாழைகள் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து விவசாயி குருமூர்த்தி கண்ணீர் மல்க கூறுகையில், ‘இந்த வாழைகளை சரியான தருணத்தில் அறுவடை செய்திருந்தால் கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்திருப்பேன். சுமார் 5 ஆயிரம் வாழை மரங்களில் ஒரு தார் வாழையை ரூ.300 வீதம் சுமார் ரூ15 லட்சம் விற்பனை செய்திருக்கலாம். ஆனால் அறுவடை பருவம் தவறிவிட்டதால் வெயிலின் தாக்கத்தில் வாழைகள் முறிந்துவிட்டன. அதனால் கிலோ ரூ.7–க்கும் ரூ.8–க்கும் கேட்கின்றனர். மேலும் பாதி வாழைகள் அழுகி விட்டன. அதனால் ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு தீவனமாக வழங்கிவிட்டேன். இதேபோல் கடந்த ஆண்டு பயிரிட்ட வாழைகள் அனைத்தும் சூறாவளியால் சேதமடைந்தது. அதற்கு முந்தைய ஆண்டு பயிரிட்ட வாழைகள் அனைத்தும் புதிய வகை வைரசின் தாக்கத்தால் நாசமானது’ என்றார்.

மேலும் செய்திகள்