போரூரில் கழிவுநீர் லாரி மோதி சாலையில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி - போலீஸ் வாகனம் சேதம்

போரூரில் கழிவுநீர் லாரி மோதியதில் கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் போலீஸ் வாகனம் சேதம் அடைந்தது.

Update: 2020-04-03 22:10 GMT
பூந்தமல்லி, 

பூந்தமல்லியில் இருந்து சோழிங்கநல்லூரில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. போரூர் ரவுண்டானா அருகே சென்றபோது குன்றத்தூரில் இருந்து போரூர் நோக்கி கழிவுநீர் ஏற்றி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, பாலத்தின் கீழ் சாலையோரம் நின்றுகொண்டு இருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதியதுடன், சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதில் கன்டெய்னர் பெட்டியில் இருந்த மளிகை மற்றும் காய்கறிகள் அனைத்தும் சாலையில் கொட்டின.

இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் நொறுங்கியதுடன், அதன் பின்பகுதி சேதம் அடைந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சாலையில் சிதறி கிடந்த மளிகை மற்றும் காய்கறிகளை மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் வாகனத்தில் யாரும் இல்லாததாலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சாலை காலியாகவே கிடந்ததாலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்