மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 6-ந்தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 6-ந்தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி மூடப்படுகிறது. அன்றைய தினம் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மற்ற நாட்களில் சென்னை மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்டு மாநகராட்சியின் முத்திரையிட்ட இறைச்சியினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை தவிர்த்து மற்ற இடங்களில் வெட்டப்பட்ட இறைச்சிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் இறைச்சி கடைகளிலும் சமூக இடைவெளி விட்டு நிற்பதை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.