மத்திய அரசின் உத்தரவுபடி 60 ஆயிரம் பேருக்கு இலவச கியாஸ் சிலிண்டர் வினியோகம்
கொரோனா ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக மத்திய அரசின் உத்தரவுபடி மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு 3 மாதங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்,
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் 900 வினியோகஸ்தர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றது. இதேபோல மற்ற எண்ணெய் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
கொரோனா வைரஸ் எச்சரிக்கை ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் சிலிண்டர் பெற்றுள்ளவர்களுக்கு 3 (ஏப்ரல், மே, ஜூன்) மாதங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டர்களுக்கான விலை சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் முன்கூட்டியே முழுமையாக செலுத்தப்படும். அந்த தொகையை எடுத்து சிலிண்டர்களை பதிவு செய்து பணமாக செலுத்தி பெற்று கொள்ளலாம்.
சிலிண்டருக்கான முழுதொகையும் முன்கூட்டியே வழங்கப்படும் என்பதால் மக்களுக்கு பணச்சுமை இல்லை. இந்த நடைமுறை 3 மாதங்களுக்கும் பொருந்தும். இதற்காக வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பதிவு செய்த செல்போன் எண் மூலம் குரல் பதிவு வாயிலாகவோ, எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலமாகவோ கியாஸ் சிலிண்டர்கள் பதிவு செய்யலாம். இதுபோன்று மாதம் ஒரு சிலிண்டர் நடைமுறையில் வழங்கப்படும்.
முதல் மாதம் முழுதொகை வழங்கப்பட்டு அந்த தொகைக்கு சிலிண்டர் பெறாவிட்டால் அடுத்த மாதம் முன்பணம் வழங்கப்படமாட்டாது. முழுதொகையும் வழங்கி விடுவதால் மானிய தொகையும் வழங்கப்படாது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நிவாரண நிதிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் இதர பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் தங்களின் 2 நாள் சம்பள தொகையாக ரூ.60 கோடியை வழங்குகின்றனர். இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.