உடன்குடியில் பரிதாபம்: வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசிய வாலிபர் தவறி விழுந்து சாவு

உடன்குடியில் வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசிய வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-04-03 22:30 GMT
உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிறிஸ்தியாநகரம் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் மரியதாஸ் பிரின்ஸ் (வயது 28). இவர் உடன்குடி-செட்டியாபத்து ரோடு பகுதியில் உள்ள தனியார் பீரோ தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த சில நாட்களாக மரியதாஸ் பிரின்ஸ் வேலைக்கு செல்லவில்லை.

இவர்களது வீடு 2 மாடிகளை கொண்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மரியதாஸ் பிரின்ஸ் தனது வீட்டின் மொட்டை மாடியின் தடுப்பு சுவரில் அமர்ந்து இருந்து செல்போனில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மரியதாஸ் பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மரியதாஸ் பிரின்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று, மரியதாஸ் பிரின்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் மொட்டை மாடியில் தடுப்பு சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்