விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா - டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள்
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனாவுக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று விருதுநகர் மாவட்டம் திரும்பிய 13 பேர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன்பின்னர் நேற்றுமுன்தினம் காரியாபட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் டெல்லி சென்று வந்தது தெரியவந்தது. அவர்களையும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 9 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சென்னையில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.