ராஜபாளையம் அருகே பயங்கரம்; தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற வாலிபர்
ராஜபாளையம் அருகே தலையில் கல்லைப்போட்டு தந்தையை வாலிபர் கொலை செய்தார்.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் சாமிநாதன் (வயது75). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். இவரின் இளைய மகன் சங்கர்(33). இவர் பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பள பணத்தை வீட்டுக்கு தரவில்லையே என மகனை சாமிநாதன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் தந்தையை அடித்து கீழே தள்ளியுள்ளார்.
மேலும் அங்கு கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலை மீது போட்டுள்ளார். இதில் சாமிநாதன் தலையில் படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்குசென்ற தளவாய்புரம் போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் சாமிநாதனை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த சங்கரை கைது செய்தனர்.