தொலை மருத்துவ ஆலோசனை திட்டம் விரைவில் தொடக்கம் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்

தொலை மருத்துவ ஆலோசனை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

Update: 2020-04-03 00:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பெங்களூருவில் நேற்று எலகங்கா, பேட்ராயனபுரா, அம்ருதஹள்ளி காலனி, தனிசந்திரா, ராசேனஹள்ளி, சொக்கனஹள்ளி ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, அந்த மக்களுடன் கலந்துரையடினார்.

அதற்கு முன்பு பல்வேறு துறை அதிகாரிகளுடன் அஸ்வத் நாராயண், கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கூலித்தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் தங்கும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பெங்களூரு மாநகராட்சி சார்பில் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருக்கும் இடங்களிலேயே உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா குறித்தும், அது எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும், அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எலகங்கா பகுதியில் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உணவு வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்களுக்கும் உணவு பிரச்சினை இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று உணவு வினியோகம் செய்யப்படுகிறது. 104 என்ற எண்ணில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

உதவி தேவைப்படுவோர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இருக்கும் இடத்தில் இருந்து சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தொலை மருத்துவ ஆலோசனை திட்டம் விரைவில் தொடங்கப்படுகிறது. இதன் பயனையும் பொதுமக்கள் பெறலாம்.

இவ்வாறு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

மேலும் செய்திகள்