ஆளில்லா விமானம் மூலம் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
பொதுமக்களின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தனர்.
சென்னை,
ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் செல்வோர்களை, சென்னையில் போலீசார் முக்கியமான சாலைகளில், 166 சோதனை சாவடிகள் அமைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் தெருக்களில், பொதுமக்கள் கூட்டமாக கூடி நிற்பதை போலீசாரால் கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகான ‘டுரோன்’ எனப்படும் கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்களை பறக்கவிட்டு, தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
சென்னை கிழக்கு மண்டலத்தில் இணை கமிஷனர் சுதாகர் ஏற்பாட்டின் பேரில் மயிலாப்பூர், கோட்டூர்புரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அயனாவரம், எழும்பூர், வேப்பேரி தலைமை செயலக காலனி ஆகிய இடங்களில் போலீசார் குட்டி விமானங்களை பறக்கவிட்டு பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர். தெருக்களில் கூட்டமாக கூடிய பொதுமக்களை விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகர் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.