தாளவாடி அருகே வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ; 50 ஏக்கர் மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம்
தாளவாடி அருகே வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் 50 ஏக்கர் பரப்பளவுள்ள மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது.
தாளவாடி,
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், கடம்பூர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது இதனால் வனவிலங்குகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. ஒரு சில வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதியான மாயாறு பகுதிக்கு செல்ல தொடங்கி விட்டன.
தற்போது வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ பற்ற தொடங்கி உள்ளது. தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட கும்பாரகுண்டி வனப்பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற காய்கறி ஏற்றி சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர் ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனப்பகுதிக்கு நடந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள இலை, தழைகளை பறித்து போட்டு தீயை அணைக்க தொடங்கினர். தகவல் அறிந்து ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சென்றனர். வாகனம் உள்ளே செல்ல முடியாததால் அவர்கள் சாலையோரங்களில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி வனப்பகுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது. வனவிலங்குகளும் தீயில் கருகி உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.