அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களுடன் ரூ.1,000 நெல்லையில் வழங்கும் பணி தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கப்பட்டது. அதில், நிவாரண பொருட்கள் வாங்க வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. நாள் ஒன்றுக்கு 100 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
நேற்று காலை 10 மணிக்கு ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது. பல கடைகளில் சமூக இடைவெளிக்கான வட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் வரிசையாக நின்று பொதுமக்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். ஒரு சில கடைகளில் வட்டத்துக்குள் நாற்காலி போடப்பட்டு இருந்தது. அதில் அமர்ந்து பொதுமக்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.
சில கடைகளில், கொரோனா பரவும் என்ற அச்சத்தை உணராமல் சமூக இடைவெளி இன்றி வரிசையாக பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பொதுமக்களை ஒழுங்குப்படுத்தினர். ஒரு சில ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு டோக்கன் வைத்து இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாலை வரை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வழங்கல் அதிகாரி கூறும்போது, ‘நெல்லை மாவட்டத்தில் தகுதியுடைய 4 லட்சத்து 43 ஆயிரத்து 451 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 789 ரேஷன் கடைகள் மூலம் அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. கால நிர்ணயம் செய்யப்படவில்லை. நாள் ஒன்றுக்கு 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலப்பாளையம் மண்டலம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளதால், அந்த பகுதியில் நிவாரண பொருட்கள் வினியோகம் செய்யவில்லை. வேன் மூலம் வீடு, வீடாக சென்று பொருட்கள் கொடுக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்‘ என்றார்.