ஐஸ் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல் - புதுவை அதிகாரிகள் அதிரடி

ஐஸ்பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ஆட்டு இறைச்சியை புதுவை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2020-04-02 08:12 GMT
வில்லியனூர்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் புதுச்சேரியில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்தகம் உள்ளிட்ட கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வில்லியனூர் சுல்தான்பேட்டை பகுதியில் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி குவிந்தனர். புதுமேட்டுதெருவை சேர்ந்த சித்திக் (வயது42) என்பவர் மெயின்ரோட்டில் ஆட்டு இறைச்சி கடை வைத்துள்ளார். அவரது கடையில் வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை விற்பனைக்கு போக மீதமுள்ள 500 கிலோ கறியை மறுதினங்களில் விற்பனை செய்வதற்காக ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார். இதுசம்பந்தமாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசாருடன் அந்த இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது ஐஸ் பெட்டியில் 500 கிலோ ஆட்டு இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதியானது.

பிறகு அவை அனைத்தையும் பறிமுதல் செய்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்தார். இதனை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்குமாறும் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அந்த பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்