கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 932 ரேஷன் கடைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 932 ரேஷன் கடைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2020-04-02 06:48 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 9 ஆயிரத்து 928 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயும், இலவசமாக அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, சர்க் கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.

இதையொட்டி கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இருந்து அதன் மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி முன்னிலையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 626 ரேஷன்அட்டைகளுக்குரிய பொருட்களை 457 ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக நேற்று அனுப்பி வைத்தனர்.

அதே போல் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தாலுகாக்களில் உள்ள ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 302 ரேஷன் அட்டைகளுக்குரிய பொருட்களை 475 ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைத்தனர். இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை ரேஷன் கடைகளில் நிவாரண நிதியும், நிவாரண பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஒரு நாளுக்கு 100 ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கும் தேதியிட்டு ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருகிறார்கள். கண்டாச்சி மங்கலம் அருகே உள்ள சிறுநாகலூர் கிராமத்தில் நின்னையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குமரவேல் மற்றும் விற்பனையாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். இதில் பொருட்கள் வாங்க வரும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுச் செல்லலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்றுமுதல் அரிசிஅட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க இருப்பதால் அவற்றை வாங்க வரும் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் ரேஷன் கடைகள் முன்பு ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டு உள்ளதோடு தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்