சேலம் மேற்கு தொகுதியில் கொரோனா நிவாரண தொகை டோக்கன் கேட்டு ரேஷன் கடை முற்றுகை - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சர்ச்சை

சேலம் மேற்கு தொகுதியில் கொரோனா நிவாரண தொகை டோக்கன் கேட்டு பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2020-04-02 04:50 GMT
சூரமங்கலம்,

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தினக்கூலிகள், விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரண தொகை மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தொகை இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை ரேஷன் கடைகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஊழியர்கள் தங்களது ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வீதி, வீதியாக சென்று ரூ.1,000 நிவாரண தொகை பெறும் தேதி, நேரம் ஆகிய எழுதப்பட்டிருந்த டோக்கன்களை வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கப்பட்டது.

இதனிடையே, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு நேற்று ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு தங்களுக்குரிய டோக்கன் வழங்குமாறு அங்கிருந்த ஊழியரிடம் கேட்டனர்.

மேலும், பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் சர்ச்சை எழுந்தது. மேலும், பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் உரசிக்கொண்டு நின்றனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த வேளையில் ரேஷன் கடையில் சிறப்பு நிவாரண தொகைக்கான டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் திரண்ட தகவல் அதிகாரிகள் யாருக்கும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்றும், அதுவும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே டோக்கன் வந்து தரப்படும் என்று ரேஷன் கடை ஊழியர் தெரிவித்தார். இதனால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்