உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மாவட்டத்தில் உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-01 22:30 GMT
ராமநாதபுரம், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருவதால் தற்போது 144-தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவை தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு விதைப்பு, நடவு மற்றும் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இடுபொருட்கள், விவசாயத்திற்கான பண்ணை கருவிகள் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ள அனைத்து தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்களில் விதைகள், உரங்கள் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை விற்பனை செய்யப்படும்.

வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் விற்பனை செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மிகாமல் இடுபொருட்களை விற்பனை செய்யவேண்டும். உர விற்பனை நிலையங்களில் கிருமிநாசினி மருந்து வைக்கவும், விற்பனை சமயங்களில் முழுபாதுகாப்புடன், குறைந்தபட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளி அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளை உடனுக்குடன் அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கலைந்து செல்வதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. வேளாண் இடுபொருட்கள் நகர்வுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதனை பரிசீலினை செய்து அனுமதி வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்