டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 250 பேர் மராட்டியத்தில் கண்டறியப்பட்டனர் - தனிமைப்படுத்தி கண்காணிப்பு
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 250 பேர் மராட்டியத்தில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
மும்பை,
டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாத தொடக்கத்தில் மதரீதியான மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்பு அவர்களில் பலர் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றனர். இந்நிலையில், அவர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியை சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம்தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் இருந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் 150 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பலர், சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக நாடு முழுவதும் அஞ்சப்படுகிறது.
இது மராட்டியத்திலும் கிலியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாநாட்டில் கலந்து கொண்ட மராட்டியத்தை சேர்ந்தவர்ள் யார்-யார்? என்பது பற்றியும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் மாநில சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் தற்போது வரை மராட்டியத்தில் டெல்லி நிஜாமுதீனில் மாநாட்டில் கலந்து கொண்ட 250 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
இதில் புனே, சோலாப்பூர், சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 182 பேரில் 106 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுதவிர நாக்பூரில் 54 பேரும், அகமதுநகரில் இந்தோனேஷியா, தான்சானியா, தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 29 பேர் உள்பட 35 பேரும், மும்பையில் இந்தோனேஷியாவை சேர்ந்த 12 பேர் உள்பட 32 பேரும், தானேயில் 25 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மும்பையில் கண்டறியப்பட்டவர்கள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் பரம்ஜீத் சிங் கூறுகையில், ‘‘மும்பையில் கண்டறிப்பட்ட 12 இந்தோனேசியர்களில் 6 பேர் பெண்கள். 6 பேர் ஆண்கள். அவர்கள் பாந்திராவில் கண்டறியப்பட்டனர். மற்ற 20 பேரில் சிலர் ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் மேற்கு புறநகரில் உள்ள மசூதியில் கண்டறியப்பட்டனர்’’ என்றார்.