சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 32 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2020-04-01 23:24 GMT
மும்பை, 

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் 52 வயது நபர், தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் பிரச்சினை ஏற்பட்டது.இதையடுத்து அவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக கல்யாணில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு இருந்து மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் கொரோனா தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மராட்டியத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது முதல் முறையாகும். அவர் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும், 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்து உள்ளார். அவருக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்று தெரியவில்லை.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் 32 போலீசாரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

ரெயில் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்